வடக்கு - கிழக்கில் கன மழை 24ஆம் திகதி வரை நீடிக்கும் சாத்தியம்
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பதிவாகி வரும் கன மழை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாகாணத்திற்கு அருகாக இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்றழுத்த தாழ்வு நிலை
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒரு புயலாக வலுப்பெற்று மத்திய வங்காள விரிகுடாவின் ஊடாக நகர்ந்து எதிர்வரும் 01.12.2025 அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள பிரம்மபூர் பகுதிக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் இது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு அருகாக நகரும் என எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போது இது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு தொலைவாகவே நகரும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் புயலினால் இலங்கையினுடைய எந்தப் பகுதிக்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவிதமான நேரடியான பாதிப்பும் கிடையாது.

இந்தப் புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 25.11.2025 முதல் 28.11.2025 வரை மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை எதிர்வரும் 26.11.2025 மற்றும் 27.11.2025 காலப்பகுதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாகக் காணப்படும்.
கொந்தளிப்பான நிலை
ஆனால் எதிர்வரும் 25.11.2025 முதல் 28.11.2025 வரை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் வட பகுதிக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வங்காள விரிகுடா எங்களுக்கு மழையைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக விளங்குகின்றது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தோன்றுகின்ற தாழமுக்கங்கள், புயல்கள், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி போன்றன இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இவ்வருடம் இதுவரை மூன்று தாழமுக்கங்களும், ஒரு புயலும், இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகளும் உருவாகியுள்ளன.
தற்போது கூட இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதுவே எமக்கு தற்போது மழை கிடைக்கக் காரணம். இவ்வாறு வங்காள விரிகுடாவில் தோன்றும் வளிமண்டல குழப்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செல்வாக்குச் செலுத்தும்போதுதான் எமக்கு மழை கிடைக்கும். அவ்வாறில்லாமல் அவை எங்கள் பகுதி மீது செல்வாக்குச் செலுத்தாமல் கடற்பகுதியூடாக நகரும்போது எமக்குப் போதிய மழை கிடைக்காது.
வெப்பமான காலநிலை
இவ்வருடம் இதுவே எமக்குப் பிராந்திய அளவிலான மழை வீழ்ச்சி வேறுபாட்டுக்குக் காரணம். மோந்தா புயலின் போதும் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. அத்தோடு அது கரையைக் கடந்த பின்னும் சில நாட்கள் வெப்பமான காலநிலை நிலவியது. இதே நிலையே உருவாகவுள்ள சென்யார் புயலின் போதும் நிகழும்.

இந்தப் புயலின் போதும் எதிர்பார்க்கும் அளவுக்கு மழை கிடைக்காது ( வடக்கு மற்றும் கிழக்கின் பெரிய குளங்கள் வான் பாயும் அளவுக்கு) ஆனால் அதன் பின்னும் சில நாட்களுக்கு மழையற்ற அல்லது குறைந்த மழையுள்ள காலநிலையே நிகழும்.
இந்தச் சூழ்நிலையில் காலநிலைத் தோற்றப்பாடுகளின் அடிப்படையில் எமது பிரதேசத்தில் (வடக்கு மாகாணத்தில் அல்லது கிழக்கு மாகாணத்தில்) ஒரு தாழமுக்கம் அல்லது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மாத்திரமே எமக்கு நாம் எதிர்பார்க்கும் மழை கிடைக்கும். ஆனால் அத்தகைய ஒரு நிகழ்வால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளும் பாரதூரமாக அமையும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |