தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடமேற்கில் நகரும் சாத்தியம்
தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், குறித்த தாழ்வு மண்டலம் மேலும் வழுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (05N - 11N, 86E - 94E) அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் இன்று மாலையிலிருந்து மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமேல் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.