எச்சரிக்கையாக இருங்கள்! காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
காற்றின் தரம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நேற்று(08.12.2022) காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டது.
வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
இந்நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது.
பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவது படிப்படியாக குறைவடைந்து வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தரச்சுட்டெண் விபரம்
இதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 95 ஐ விட குறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 80 ஆகவும், யாழ்ப்பாணத்தில் 51 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.
குருணாகலையில் 71 ஆகவும்,வவுனியாவில் 63 ஆகவும், கண்டியில் 94 ஆகவும், கேகாலையில் 83 ஆகவும், காலியில் 43 ஆகவும், இரத்தினபுரியில் 71 ஆகவும், களுத்துறையில் 71 ஆகவும் மற்றும் அம்பாந்தோட்டையில் 83 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணிதல்
இதேவேளை பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல எனவும் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம் எனவும் அதனை தொடர்ந்து கடைபிடிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
