எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிப்போம்: ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா நம்பிக்கை
எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை எமக்குண்டு என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் வேலைத்திட்டத்துக்கு எதிரான விசாலமான வேலைத்திட்டம் தேவை என்பதால் தேசிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான கட்சிகள்
மேலும் தெரிவிக்கையில், அடுத்து ஆட்சியை அமைக்கும் திட்டத்தில் நாம் இருப்பதால் இந்தப் பிரதான கட்சிகள் எவற்றுடனும் நாம் சேரப்போவதில்லை.
பிரதான இரண்டு கட்சிகளும் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்துவிட்டனர்.
எமது கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவரும் நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். இதனால்தான் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கின்றது.
எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
உற்பத்தி பொருளாதாரம்
இந்தப் பொருளாதார பிரச்சினையின் போது எங்களின் ஆட்சி இருந்திருந்தால் கடன் வழங்கிய நாடுகளுடன் பேசி கடன் செலுத்துவதைச் சற்றுப் பின்னுக்குப் போட்டு கொஞ்சம் கடனைப் பெற்றுக்கொண்டு டொலர் சம்பாதிக்கும் உற்பத்தி பொருளாதாரத்துக்குச் சென்றிருப்போம்.
சீனாவும் இந்தியாவும் கடன் தருவதற்கு இருந்தன. இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்று அரசாங்கம் அறிவித்ததால் அந்த கடனைப் பெற முடியாமல் போனது.
அதனால் இறுதியில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் விழுந்து பிச்சை
எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.