விடுதலை போராட்ட தியாகங்களுக்கு துரோகமிழைக்க மாட்டோம் - சட்டத்தரணி சுகாஸ் கருத்து
நிபந்தனைகளை ஏற்கத் தயாரில்லாதவர்களை ஆதரித்து எமது மக்களுக்கும் விடுதலைப்போராட்டத்தின் தியாகங்களுக்கும் ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக சுகாஸின் கருத்துக்கள்
மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில், “அன்புக்குரிய தமிழ்த் தேச மக்களே! நாளைய ஜனாதிபதித் தெரிவு தொடர்பாகச் சகல வேட்பாளர்களோடும் தமிழினத்தின் அபிலாஷைகளையும் நலன்களையும் முன்னிறுத்திப் பேச்சுக்களையும் பேரம்பேசல்களையும் மேற்கொண்டுள்ளோம்.
இதன்படி, சஜித் பிரேமதாசா அவர்கள் தமிழரின் இனப்பிரச்சனைக்குத் தீர்வாகப் பஞ்சாயத்து முறையையே பரிசீலிப்பவர், ரணில் விக்கிரமசிங்க மற்றும் டளஸ் அளகப்பெரும ஆகிய இருவரும் ராஜபக்சர்களை பாதுகாப்பவர்கள் மற்றும் அநுர குமார திஸாநாயக்க சார்பில் உறுதியற்ற,தெளிவற்ற மழுப்பல் பதில்களே உள்ளன.
ஆகவே தமிழரின் நியாயமான அபிலாஷைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜனாதிபதித் தெரிவிலிருந்து ஒதுங்குகின்றோம்.
எமது நிபந்தனைகளை ஏற்கத் தயாரில்லாதவர்களை ஆதரித்து எமது மக்களுக்கும்
விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களுக்கும் ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.