நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் (Video)
வடக்கின் பல பகுதிகளிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா, கிளிநொச்சி, மன்னர் ஆகிய பகுதிகளில் இன்று தமக்கான நீதி கிடைக்கக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கருத்து தெரிவிக்கையில்,
எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி மூன்று வருடங்களிற்கும் மேலாக நாம்
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த
அரசாங்கமும் வழங்கவில்லை.
அரசு மீது நம்பிக்கை இழந்த நாம் சர்வதேசத்திடம் எமக்கான நீதியை வேண்டி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம். எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இனியாவது சர்வதேசம் முன்வர வேண்டும்'' என கூறியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் "எங்கே எங்கே உறவுகள் எங்கே", "நிதி வேண்டாம் நீதியே வேண்டும்", "பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே", "அரசின் பொறுப்பற்ற பதில்களைக் கண்டிக்கின்றோம்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
செய்தி - கோகுலன்
கிளிநொச்சி
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாதம் தோறும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டத்தில் பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், படங்களையும் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி மனுவல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச காணாமல் 'ஆக்கப்பட்டோருக்குப் பதில் சொல், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, சர்வதேச விசாரணை வேண்டும், இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?, 20 ஆம் திருத்தத்தை நீக்கு,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,
''நாங்கள் இன்று, நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக உறவுகளைத் தொலைத்த தாய்மார்கள் வீதிகளில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த அரசாங்கம் இது வரையில் எமக்கான நல்ல ஒரு முடிவைக் கூறவில்லை. அதனால் இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாமல் சர்வதேசம் எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்கின்றோம்.
ஆனால் இந்த சர்வதேசமும் கண்விழித்துப் பார்க்கவில்லை. இப்படியாக இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் யாரிடம் போய் நீதியைக் கேட்பது? இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து நின்று சர்வதேசமும் வேடிக்கை பார்க்கிறது? எனும் கேள்வி எழுகிறது.
கண்முன்னே கைகளால் ஒப்படைத்த உறவுகளைத் தொலைத்துவிட்டு இன்று நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இலங்கை அரசோடு சேர்ந்து இந்த சர்வதேசமும் வேடிக்கை பார்க்கிறது. உறவுகளைக் கொன்று குவித்த அரசாங்கத்திடம் தான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஜனாதிபதிக்குக் காது மந்தம் ஏனென்று சொன்னால் நாங்களும் நீதியைக் கேட்டுக் கேட்டு களைத்துப் போய் விட்டோம். ஆனால் காது மந்தமாகி கற்களைப் போல ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கிறார்கள்.
ஆனால் எமது உயிர் உள்ளவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டு இருப்போம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - ஆசிக்



