அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று(23.11.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடத்தி
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எம்முடைய ஆட்சியில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வோம்" என தற்போதைய ஜனாதிபதி அவரது ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மேடைகளில் முழங்கினார். இது தமிழர்களுக்கு கொடுத்த அரசியல் வாக்குறுதியாகும்.
இதனை நிறைவேற்றுவதைவிடுத்து இன்று வரை காலம் தாழ்த்துவது என்பதும் அது தொடர்பில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதது என்பது அரசியல் வாக்குறுதி கொலையாகும்.

இதனையே கடந்த கால ஆட்சியாளர்களும் செய்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்தப் போதும் கடந்த கால ஆட்சியாளர்கள் அதற்கு செவிமடுக்கவில்லை.
அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றே சிந்தித்தனர். தற்போதைய ஜனாதிபதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என கூறியபோது அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பமும் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ந்தனர்.
அதற்கு தமிழர்கள் தம் வாக்குகளை அள்ளி வழங்கி நன்றி தெரிவித்தார். அந்த நன்றி உணர்வின் மீது தற்போதைய அரசாங்கம் மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அமைதியோடு பார்க்கும் நிலையிலும் தமிழர்கள் இல்லை எனலாம்.
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து
தற்போதைய அரசியல் கைதிகள் அனைவரும் தண்டனை காலத்தை விட அதிகமான காலத்தை சிறைகளுக்குள் கழித்துவிட்டனர்.
தற்போது நிலையில் இவர்களுடன் சேர்ந்து இவர்களது குடும்பங்களும் தண்டனையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தப் போதும் அது நடக்கவில்லை. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதன் மூலம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க முடியும். அதனை தற்போதைய ஜனாதிபதி செய்வார் என எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து தமிழ் மக்களின் அரசியல் கௌரவத்தையும் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுமாறு கேட்கின்றோம்.
தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் தகவல்
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்.
தமிழர் தாயக அரசியல் பலமடைந்து முன் செல்வதற்கான உறுதி ஏற்று சுடரேற்றுவதன் மூலம் தமிழ் தேசம் ஒளி வீசும்.அதுவே மாவீர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனும் தமிழர் தாயகத்திற்கு கடமையுமாகும் என்பதை உணர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |