தீவிரவாதத்தை விதைத்தோம்: சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு...!
“பாகிஸ்தானில் நாம் தீவிரவாதத்தை விதைத்தோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Muhammad Asif) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (30.01.2023) பாகிஸ்தானிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 170 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பொறுப்பேற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்
இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசும் போது,
பாகிஸ்தானில் நாம் தீவிரவாதத்தை விதைத்தோம் என்று பேசியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் பேசியதாவது, ‘‘பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது மண்ணில் விதைத்துள்ளது. இந்தியாவிலோ அல்லது இஸ்ரேலிலோ தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை. ஆனால் அது பாகிஸ்தானில் நடந்துள்ளது.
ஆரம்பத்தில் நாம் பயங்கரவாதத்தை விதைத்தோம் என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்.
பயங்கரவாதத்தை விதைத்தோம்
பெஷாவர் மசூதி வெடிப்புக்கு யார் பொறுப்புக் கூறுவார்கள். தீவிரவாதம் எந்த மதத்தையும் பிரிவையும் வேறுபடுத்துவதில்லை. விலைமதிப்பற்ற உயிர்களைப் பறிக்க மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பயன்படுத்தப்படுகிறது.
ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, பாகிஸ்தான் தனது சேவைகளை அமெரிக்காவிற்கு வாடகைக்கு வழங்கியது. அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் நீடித்தது. அதன் பிறகு அமெரிக்கா, ரஷ்யா தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடி மீண்டும் வொஷிங்டனுக்குச் சென்றது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்விளைவுகளை சமாளிக்க பாகிஸ்தான் விடப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கிறது என இந்தியா உட்பட உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குற்றம்சாட்டி வந்தநிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரே ஒத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
