அரசின் மீது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பகிரங்க குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்,
“அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்தின் பிரச்சினையாகும்.
எனினும், அரசாங்கத்திலுள்ள கூட்டணியில் காணப்படுகின்ற பிரச்சினைகளே இன்று வெளிப்பட்டுள்ளன. காரணம் அரசாங்கத்தின் பங்காளி கட்சியொன்றின் தலைவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் இந்த செயற்பாட்டை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எரிபொருள் கொள்வனவு செய்ய நிதியில்லை என்று கூறுபவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே பேச வேண்டும். அரசாங்கத்தின் அரசியல் முரண்பாடுகளே தற்போது வெளிப்பட்டுள்ளன. பொருளாதார பிரச்சினைகளே அரசியல் முரண்பாடுகளாகியுள்ளன.
இந்த அரசியல் முரண்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு தொடரும் என்று தெரியாது. கம்மன்பில கூறியதைப் போன்று அரசாங்கத்திற்குள்ளேயே அதனை சீரழிப்பதற்கான எதிரிகள் உள்ளனர் என்பது உண்மை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.