உங்கள் நினைவுகளை சுமந்து செல்கிறோம்! சசிகலா ரவிராஜ்
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று அவர்களை அஞ்சலிக்கும் வாய்ப்புக்கள் எமக்கு மறுக்கப்பட்டிருப்பினும் எமது மனங்களிலே தீபமேற்றி அவர்களை நாம் நினைவுகூருகிறோம் என சசிகலா இரவிராஜ் (Sasikala Raviraj) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாழ்ந்து சுகபோகங்களை அனுபவிக்க வேண்டிய இளவயதில், மண்ணையும்
மக்களையும், நேசித்து, நாம் வாழ, தம் உயிர் ஈய்ந்த மாவீரச்செல்வங்கள்
அவர்கள்.
அரசியல் வழியிலும் அகிம்சை வழியிலும் போராட்டங்களை முன்னெடுத்த அரசியல்
தலைவர்களின் முயற்சி பலனளிக்காததால் ஏமாற்றமடைந்த அவர்கள் தாம் விரும்பாத ஒரு
போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அது அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஓர் யுத்தம்.
எமது இனத்தின் இருப்பை உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதேயன்றி, அவர்கள் ஆயுதத்தின் மீது ஆசை கொண்ட ஆயுததாரிகள் அல்ல. மாவீரர்களே, உங்கள் நினைவுகளை சுமந்து செல்கிறோம்.
எங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஆன்மாவிலும், உங்களை நினைந்து பூசிக்கிறோம் .நினைவுகளைத் தடைசெய்யும் வல்லமை இவ்வுலகில் யாருக்கும் இல்லையல்லவா? மரண தேவனுக்கு அஞ்சி நடுங்குவதும் மறைந்தோடுவதுமே மாந்தரின் வழமை, ஆனால் மரணத்தை துச்சமாக மதித்துக் களமாடிய உங்கள் நினைவுகளும் தியாகங்களும் எங்களை பதைபதைக்கவும் திகைக்கவும் வைக்கின்றன!
மாவீரன் அலெக்ஸ்சாண்டர் மாவீரன் நெப்போலியன் என்று சரித்திரம் குறிப்பிடும் வரிசையில் உங்களையும் வைத்துவிட எம் மனம் ஒப்புதல் வழங்க மறுக்கிறது. உங்கள் களம், உங்கள் உளம் அனைத்தும் மாறுபட்டவை மாவீரர்கள் என்ற சொல் அவர்களையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவதால் அச்சொல்லிலும் மேலான சொல் ஒன்றை தேடுகிறோம்.
சுயநலம் தவிர்த்து பயமின்றிக் களம் புகுந்து போராடி வீர மரணமெய்திய எம் சகோதரர்களே புதல்வர்களே உங்களைப் போற்றி அஞ்சலிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam