இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்தை ஏற்கிறோம்! பிரித்தானியா
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. இதன்போது இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டார்.
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன.
அத்துடன், இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலு இழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிவதாக ஆணையாளர் கூறியுள்ளார்.
The UK shares concern raised by UN High Commissioner for Human Rights @mbachelet at #HRC48 on #SriLanka, including action taken against protesters and critical voices. We will continue to press for progress on human rights and minority protections in Sri Lanka. https://t.co/Ky0EqXRT2n
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) September 13, 2021
இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மேலும் தெரிவிக்கையில்,
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடரில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ச்சியாக வழங்கும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.