லண்டனை உலுக்கிய இளம்பெண் படுகொலை! - குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை
லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சாரா எவரார்டின் (Sarah Everard) படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றவாளிக்கு சிறையிலேயே மரணிக்கும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு லண்டனில் வைத்து கடந்த மார்ச் 03ம் திகதி கடத்திச் செல்லப்பட்ட சாரா எவரார்ட், பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய மெட்ரோ பொலிட்டன் பொலிஸ் அதிகாரி வெய்ன் கூசன்ஸ் (Wayne Couzens) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
சாரா எவரார்டை கைது என்ற போர்வையில் கடத்திச் சென்று, வல்லுறவுக்கு இரையாக்கி கொலை செய்ததை காவல்துறை அதிகாரி ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், 48 வயதான வெய்ன் கூசன்ஸூக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றவாளி ஆயுள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. வாழ்நாள் முழுவதும் குற்றவாளி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த கோவிட் தொற்று காலகட்டத்தில் ஓராண்டில் மட்டும் பிரித்தானியா முழுவதும் 180 பெண்கள் ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மேயம் சாதிக் கான் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.