புழுதியாறு ஏற்று நீர்ப்பாசன மீள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சி- புழுதியாறு ஏற்று திட்டத்திற்கான சூரிய ஒளியிலான மின்சாரத் தொகுதி இணைப்பு மற்றும் மீள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர் விநியோகப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று(26) வடமாகான ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையால் 32 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு குறிப்பிட்ட சில மாதங்களில் செயலிழந்ததுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவித பயன்பாடுகளுமின்றி காணப்பட்டது.
புனரமைப்பு பணிகள்
இந்தநிலையில் இதனை மீளமைத்து தருமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, பயன்பாடின்றி காணப்பட்ட மேற்படி நீர்ப்பாசனத்திட்டத்தினை ஏற்கனவே வடமாகாண ஆளுனர் நேரடியாக சென்று பார்வையிட்டதையடுத்து அதற்கான மேலதிக அபிவிருத்திப்பணிகள் வடக்கு மாகாண சபையின் குறித்தொகுக்கப்பட்ட நிதியில் சுமார் 12 மில்லியன் ரூபாய் செலவில் சூரிய மின்கல மூலம் இயங்கும் நீர் பம்பிகள் மூலம் விவசாயிகளுக்கான உடனடி நீர் வழங்கும் திட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேற்படி மீளமைக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தை நேற்று பகல் 12 மணிக்கு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் போது வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜ கோபு, அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன பொறியியலாளர் கருனாநிதி, இரணைமடு நீர்பாசனப் பொறியியலாளர் கை.பிரகாஸ், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



