கொக்குத்தொடுவாய் குழாய் நீர் வழங்கல் செயற்பாடு : உட்கட்டுமானங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) கொக்குத்தொடுவாயில் குழாய் நீர் விநியோகத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் ஆகிய மூன்று கிராமங்களில் வாழும் மக்களுக்கான குடி நீர் விநியோகத்திற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் பகுதி வாழ் மக்கள் எதிர்கொள்ளும் குடி நீர் தட்டுப்பாட்டுக்கான தீர்வாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுதல் பயனுடையதாக இருக்கும் என மக்கள் நலன் சார்ந்தோர் குறிப்பிட்டுள்ளனர்.
கொக்குத்தொடுவாய் கிராமத்தின் நுழைவாயில் பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு வீதியின் அருகாக வீதியின் மேற்கே அமைக்கப்படும் இந்த நீர்வழங்கல் கட்டமைப்புத் தொகுதி பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட்டு வருவதாக துறைசார்ந்த வல்லுநர் ஒருவர் இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலம் போரினால் பாதிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் கிராமம் அதனை அடுத்துள்ள கிராமங்களிற்கு இந்த நீர்வழங்கல் தொகுதி அபிவிருத்தி நோக்கிய பாச்சலில் பெரும் ஒரு மைல்கல் என சமூக விடய ஆய்வாளர்கள் சுட்டுவது நோக்கத்தக்கது.
நிதி அனுசரணை
Wassip என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் இந்த நீர்வழங்கல் செயற்பாட்டிற்கு உலக வங்கி நிதியனுசரணையினை வழங்கி வந்துள்ளது.
நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம் (water supply and sanitation Improvement project - wassip) என்ற திட்டச் செயற்பாடாக இந்த முயற்சியினை நீர் வழங்கல் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்ட முன்னெடுப்பிற்காக உலக வங்கியானது 368 மில்லியன் இலங்கை ரூபாவினை திட்ட மதிப்பீட்டுச் செலவாக வழங்கியுள்ளது. இந்த செயற்திட்டம் 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை என செயற்திட்ட காலம் ஒருவருடமாக திட்டமிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.
திட்ட முன் மொழிவின்படி உரிய காலம் கடந்து விட்ட போதும் தற்போது தான் செயற்றிட்டம் பகுதியளவில் முடிந்திருப்பதாக செயற்றிட்ட அவதானிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விபரக்குறிப்பு அறிவிப்பு பலகையில் குறிக்கப்பட்ட மேற்படித் தகவல்கள் தொடர்பில் விரிவான தகவல்களை தண்ணீரூற்றில் உள்ள நீர்வடிகாலமைப்புச் சபையின் தலைமைக் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என செயற்றிட்ட பொறியியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
குழாய் நீரின் தேவை
கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி பகுதிகளில் நல்ல நிலத்தடி நீர் வளம் இருப்பதாக அப்பகுதி வாழ் மக்களோடு மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலமும் அப்பகுதியில் மேற்கொண்ட அவதானிப்பின் மூலமும் அறிந்துகொள்ள முடிகின்றது.
ஒரு பகுதி மணலாகவும் மற்றொரு பகுதி களியாகவும் இருக்கும் நிலத்தொடரைக் கொண்டுள்ள இப்பகுதிகளுக்கு அருகில் கடல் அமைந்துள்ளது.வில்லுக்குளத்தினையும் ஆறுகளையும் கொண்டுள்ள இப்பகுதியில் குழாய் நீர் விநியோகம் அவசியமற்றது என கருத்துரைக்கும் சிலரும் இருப்பதைக் குறிப்பிடலாம்.
எனினும் கொக்கிளாய் பகுதியில் வாழும் சிங்கள மக்களை இலக்காக கொண்டே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் கருத்துரைப்பது நோக்கத்தக்கது.
உட்கட்டுமானத்தில் மாற்றம்
நகர மயமாதலில் ஒரு பகுதி தனக்கென சில முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும். அத்தகைய கூறுகளில் ஒன்றாக குடிநீர் வடிகாலமைப்பு ஏற்பாடுகளும் இருக்கின்றது.
சீரான மின் விநியோகம் மற்றும் சீரான இலகுவான போக்குவரத்து என்பனவும் நகரமயமாக்கலில் முதன்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொக்குத்தொடுவாய் மற்றும் அதனை அடுத்துள்ள கிராமங்களின் மின் வசதி மற்றும் பிரதான வீதியின் நேர்த்தியமைப்பு என்பவற்றொடு இப்போது குழாய் குடிநீர் வழங்கல் தொகுதியும் அமைக்கப்பட்டு வரும் சூழலில் அபிவிருத்தி நோக்கிய பயண ஏற்பாட்டில் கொக்குத்தொடுவாய் நீர் வழங்கல் தொகுதியும் உரிய பொருத்தமான வகிபாகத்தினை பெற்று விடும் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |