கிளிநொச்சியில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடி
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களையும் கடும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவிவரும் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு புதிய நீர் இணைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் விண்ணப்பித்துள்ள போதிலும், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நீர் வழங்கல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டும் எவ்வித முறையான பதில்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோரிக்கை
கிளிநொச்சியின் தொலைதூரக் கிராமங்களில் இருந்து புதிய நீர் இணைப்புக்காக அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்து, பல தடவைகள் ஏறி இறங்கி அலைக்கழிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்குத் திருப்திகரமான சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நீர் விநியோகம் துண்டிக்கப்படுதல் மற்றும் உரிய காலத்தில் மீள் இணைப்புச் செய்யப்படாமை போன்ற செயற்பாடுகள், முழுமையாக நீர் வழங்கல் வடிகாலமைப்பின் விநியோகத்தை நம்பியிருக்கும் மக்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, புதிய நீர் இணைப்புகளை விரைவுபடுத்துவதுடன், தடையற்ற குடிநீர் விநியோகத்தையும் அலுவலகச் சேவைகளின் வினைத்திறனையும் உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.