அறுகம்பை பிரதேசத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை
அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலைய உரிமையாளருக்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்றம் 100,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி சாலிந்த நவரத்தனவினால் இந்த வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை 130 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை 150 ரூபாவிற்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
100,000 ரூபா அபராதம்
இந்த வழக்கு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
தண்டனை வழங்குவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத் மற்றும் என்.எம் றிப்கான், இந்த குற்றத்திற்காக ஒரு இலட்சம் முதல் ஜந்து இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 100,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
