கீரிமலையில் தேங்கிக்கிடக்கும் கழிவுகள்: விசேட விசாரணை குழு அமைக்குமாறு கோரிக்கை
கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளுமாறு வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ள போதிலும் அவை மீள அள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணை குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீரிமலை பகுதியில் உள்ள கற்குவாரியில் அனுமதியின்றி பெருந்தொகையான கழிவுகள் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டது.
எதிர்ப்பு
வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அது தொடர்பில் வடமாகாண ஆளுநர் , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடமும் முறையிட்டதை தொடர்ந்து , அவர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவற்றினை உடனடியாக மீள அள்ளுமாறு உத்தரவிட்டனர்.
உத்தரவுக்கு அமைய சிறியளவிலான கழிவுகளை மாத்திரம் மீள அள்ளிய நிலையில் பெருந்தொகையான கழிவுகள் மீள அள்ளப்படவில்லை.
விசாரணைகள்
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குவாரி கிடங்குகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

அவ்வாறு தேங்கியுள்ள நீரில் கழிவுகளும் கலந்துள்ளமையால் , அப்பகுதியை சூழவுள்ள பிரதேச நிலத்தடி நீர் மாசுபடும் பெரும் அபாயம் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக , விசேட விசாரணை குழுவினை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலி. வடக்கு உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.


