தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக்கூடு - அச்சத்தில் பயணிகள்
நுவரெலியா - தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக்கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையக் கட்டடத்தின் நாவலப்பிட்டி பேருந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் இந்த பாரிய குளவிக்கூடு அமைந்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
குறித்த குளவிக் கூடு கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் காணப்படுவதாகவும், இதுவரை பொதுமக்களுக்கு குளவிக் கொட்டு சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் அங்கு கடமையாற்றும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குளவிக் கூட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், ஒரே நேரத்தில் அதிகளவான குளவிகள் வெளியேறி பொதுமக்களை தாக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

குறிப்பாக, பேருந்துகளின் தொடர்ச்சியான இயக்கம், அதிர்வுகள் மற்றும் அதிகளவான மக்கள் நடமாட்டம் காணப்படும் இந்த இடத்தில், குளவிக்கூடு அமைந்திருப்பது எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
குளவிகள் தமது கூட்டை பாதுகாக்கும் இயல்பைக் கொண்டுள்ளதால், கூட்டை நேரடியாக கலைப்பது அல்லது அதற்கு இடையூறு ஏற்படுத்துவது குளவிகளின் தாக்குதலைத் தூண்டக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குளவிக்கூட்டை அகற்றல்
மலையகத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் காணப்படும் இந்த குளவிக் கூட்டை அதிகாரிகள் உடனடியாக அவதானத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உரிய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், குளவிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஆபத்து ஏற்படவில்லை என்பதால் எதிர்காலத்திலும் ஆபத்து ஏற்படாது என அலட்சியப்படுத்தாமல், மக்கள் அதிகம் கூடும் பொது இடம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என சுட்டிக்காட்டுகின்றனர்.


