உண்மை, பொய் தொடர்பான கோட்டஹாச்சியின் கருத்து தவறானது: வசந்த சமரசிங்க மறுப்பு
உண்மையுள்ள ஒன்றைப் பொய் என்றும், பொய்யான ஒன்றை உண்மை என்றும் மற்றவர்களை நம்ப வைக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும், அது ஒரு ஜனநாயக உரிமை என்றும் கூறிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹாச்சியின் கருத்துக்களுக்கு, அமைச்சர் வசந்த சமரசிங்க பதிலளித்துள்ளார்.
இந்தநிலையில் பொய்களை உண்மையாக ஏற்றுக்கொள்ள சமூகத்தை ஊக்குவிப்பது தவறு என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது, கூறியுள்ளார்.
அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளைத் தடுக்காது என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக கோட்டஹாச்சி குறித்த கருத்தை வெளிப்படுத்தியிருக்காமல் இருக்கலாம் என்று நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக உரிமை
கடந்த வாரம் களுத்துறையில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய கோட்டஹாச்சி, அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களின் எதிர்மறையான பக்கத்தைக் காண மக்களுக்கு உரிமை உண்டு என்றும், அந்த ஜனநாயக உரிமையை அரசாங்கம் ஒருபோதும் தடுக்காது என்றும் கூறியிருந்தார்.
"எந்த உண்மையையும் பொய்யாகவும், எந்தப் பொய்யையும் உண்மையாகவும் நம்ப வைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு. அது உங்கள் ஜனநாயக உரிமை. அரசாங்கம் ஏதாவது நல்லது செய்யும்போது எதிர்மறையான பக்கத்தைக் காண உங்களுக்கு உரிமை உண்டு. மேலும், ஒரு தலைவர், அரசாங்கம், நிறுவனம் அல்லது ஒரு தனிஆள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் செய்யும்போது பாராட்டவும் உங்களுக்கு உரிமை உண்டு" என்று அவர் தெரிவித்திருந்தார்;
அவரது சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எழுப்பியிருந்தன.
இந்த கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பியிருந்த நிலையிலேயே அமைச்சர் சமரசிங்கவின் கருத்து வெளியாகியுள்ளது.
ஒரு பொய்யை உண்மை என்று எவராலும் நம்ப முடியும் என்றாலும், அது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது உண்மையாகாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |