இலங்கை கடற்பரப்புக்களில் சீரற்ற காலநிலை: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழையால் கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படுவதால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழிலாளர் சமூகத்தினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம்
அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புக்களிலும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புக்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் உயரத்துக்குக் கடல் அலைகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |