வடக்கு மாகாண குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கை.. கண் பார்வை இழக்கும் அபாயம்!
வடக்கின் யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் வெற்றிலைக்கு பயன்படுத்தப்படும் சுண்ணாம்பினால் சிறுவர்களின் கண் பார்வை இழக்கப்படும் பாரிய அபாயம் உருவாகியுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“வெற்றிலைக்கு பாவிக்கும் சுண்ணாம்பு ஒருபுறம் புற்றுநோய் என்ற மிகப்பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு ஏற்படுத்தி வரும் சூழலில் தற்போது மற்றொரு பாரிய பிரச்சினையையும் அது உருவாக்கி வருகின்றது. குறிப்பாக வெற்றிலைக்கு பாவிக்கும் சுண்ணாம்பு முன்னைய காலத்தில் வெற்றிலையின் பின் பகுதியில் பூசப்பட்டும் தாள்களிலுமே விற்பனைக்கு வந்திருந்தது.
கட்டுப்பாடு
ஆனால், தற்போது வர்ணப் பூச்சுக்கள் கலந்த கலவையாக பாரிய பொதிகள் முதல் சிறிய பொதிகள் வரை சுண்ணாம்பு விற்பனைக்கு சந்தைகளுக்கு வருகின்றது.
வர்ணங்கள் பூசப்பட்டு சிறுவர்களின் கண்களுக்கு உறுத்தும் வகையில் சிறிய பொதிகளில் வீடுகளில் இந்த சுண்ணாம்பு வலம் வருவதால் அதை வீட்டிலுள்ள சிறியவர்கள் விளையாட்டுப் பொருளாக கருதி கைகளில் எடுத்து ஆபத்தை தமக்கு தாமே உருவாக்குகின்ற நிலை அண்மையில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சில நாட்களுக்குள் யாழ். மாவட்டத்தில் 4 சிறுவர்களும் கிளிநொச்சியில் 2 சிறுவர்களும் இந்த சுண்ணாம்பின் தாக்கத்துக்குள்ளாகி ஒரு கண்ணின் பார்வையை ஏறத்தாழ இழந்தவர்களாகி உள்ளனர். சுண்ணாம்பு ஒருவரின் கண்ணில் பட்டால் கண்ணின் பார்வை ஏறத்தாள முழுமையாக பாதிக்கப்படும்.

அதையும் தாண்டி நாம் மருத்துவ முயற்சிகளை மேற்கொண்டால் குறித்த சிறுவர்கள் ஒரு நாளுக்கு பல முறை மயக்கமூட்டப்பட்டு சிகிச்சைக்கு உட்படும் கவலையான நிலை உருவாகும். மயக்கமேற்றி சிகிச்சை வழங்கப்படுவதென்பது சிறுவர்களின் எதிர்கால உடல் நலன்களுக்கு சாதகமான ஒன்றல்ல.
அத்துடன், குறித்த பிள்ளையுடன் பெற்றோர் முழுமையாக மருத்துவத்துக்காக நேரத்தை செலவளிக்கும் போது குடும்பத்தினரது பொருளாதாரம் முடங்குகின்றது. அதுமட்டுமல்லாது குறித்த பிள்ளையுடன் அந்த குடும்பத்தின் ஏனைய பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாக்கப்படுகின்றது.
இது ஒருபுறம் இருக்க வெற்றிலை மெல்லும் நபர்களால் அவர்களது பொறுப்பற்ற செயற்பாடுகளால் தமது குடும்பத்துக்கு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரமும் மருத்துவம் என்ற ரீதியில் வீணடிக்கப்படுகின்றது. இந்நேரம் சுண்ணாம்பு பொலித்தீனில் பொதிசெய்யப்பட்டு விற்பனை செய்ய முடியாது என்ற ஒரு கட்டுப்பாட்டை சுகாதார அதிகாரிகள் முன்மொழிவாக கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
கண் பார்வை
ஏனெனில், சுண்ணாம்பை சிறிய பொலித்தீன் பைக்கற்றுகளில் விற்பனை செய்யும் போது அதை சிறுவர்கள் உடைக்க முற்படும் சந்தர்ப்பத்தில் அதன் மூலக்கூறுகள் கண்ணில் படும் அபாயம் இருக்கின்றது. எனவே வெற்றிலை மெல்லும் நபர்கள் சிறுவர்களின் நலன்களையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அவற்றை சிறுவர்கள் கையாளாத வகையில் பாதுகாப்பான இடங்களில் வைப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மயிர் கொட்டியின் தாக்கத்தாலும் சிறுவர்களின் கண்பார்வை முழுமையாக இல்லாது போகும் நிலை இருக்கின்றது. இன்றைக்கு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த மயிர் கொட்டியை அழித்து தமது பாதுகாப்பை உறுதி செய்து வந்திருந்தனர்.
ஆனால், இன்றைய சூழலில் மயிர்கொட்டியின் தாக்கம் குறித்து எவரும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. அதை தமது புறச் சூழலில் இருந்து அழிப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை. எனவேதான் கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மயிர்கொட்டியின் தாக்கத்துக்கு உள்ளாகும் நபர்களது எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது.

எனவே, மக்கள் இந்த மயிர்கொட்டியின் அபாயத்தை உணர்ந்து அவற்றை அழித்து சூழலையும் நலன்களையும் பாதுகாக்க விழிப்புணர்வு கொள்வது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் கண்களில் ஏதேனும் திசுக்கள் வீழ்ந்தால் தாய்ப்பால் விடுவது மிக மிக ஆபத்தானது. தாய்பால் கண்ணுக்குள் விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த 20இற்கும் அதிகமானோரில் ஒருவரை தவிர ஏனைய அனைவரதும் கண் பார்வை முழுமையாக இழக்கப்பட்டுள்ளது.
எனவே, கண்களில் என்ன வாழ்ந்தாலும் நீரால் கழுவுவதே முதலாவது முதலுதவி சிகிச்சை. அதன் பின்னர் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றால் கண்பார்வையை இழக்கும் நிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam