கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவசர எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (06) முற்பகல் 11.30 மணி முதல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.
இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
அதேபோல், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையும் மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பரப்பிற்குள் ஊடுருவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.