பேஸ்புக்களில் புகைப்படங்களை பகிரும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அழகான பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்யப்படுதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க உத்தரவிட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவாரா என்பதை விசாரித்து, நீதிமன்றத்தில் தகவல்களை தெரிவிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அழகான புகைப்படங்கள்
சந்தேக நபர் பேஸ்புக்கில் பெண்களால் பகிரப்படும் அழகான புகைப்படங்களைப் பயன்படுத்தி வேறு பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் பெரும்பாலான சமூக ஊடக பயனர்கள் ஈர்க்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் பல்வேறு நபர்களுக்கு பேஸ்புக் பக்கங்களை விற்று பணம் பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
“என் நிலவு நீ” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியதாகவும், புகைப்படங்களுக்கு சொந்தக்காரர்களான பெண்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாமல் அவர் இந்த மோசடிச் செயலைச் செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
விசாரணை அதிகாரிகள்
மோசடி தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பெண்களின் முகங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர் 10க்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களை மோசடியாக உருவாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.