இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அவசர எச்சரிக்கை (Video)
வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
விசா தொடர்பில் அறிவுறுத்தல்
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் சென்றவர்களில் சிலர் தொழிலின்றி நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர், யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு முகவர் நிலையம் தொடர்பில் எச்சரிக்கை
இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் பத்தரமுல்ல ரஜமல்வத்த என்ற இடத்தில் நடத்தப்பட்டுள்ளது.
மலேசியாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து அஜித்குமார விக்ரமசிங்க என்ற நபர், நாடு முழுவதிலும் சுமார் 180 இளைஞர் யுவதிகளிடம் தலா 1 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா வீதமும், ஏனையவர்களிடம் 6 ஆயிரம் ரூபாவும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.