இஸ்ரேலிய இராணுவத்தின் திட்டமிட்ட இலக்கு! கடுமையான குற்றச்சாட்டு - லெபனானின் அறிவிப்பு
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் ஊடகவியலாளர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பதாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் பிரதமர் நவாப் சலாம் ஆகியோர் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
'அல்-அக்பர்' பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் அமல் கலீல் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை சர்வதேச அமைப்புகளிடம் கொண்டு செல்லப்போவதாக லெபனான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களைக் கொல்வது மற்றும் அவர்களைக் காப்பாற்ற வரும் மீட்புக் குழுவினரைத் தடுப்பது ஆகியவை அப்பட்டமான "போர்க்குற்றங்கள்" என லெபனான் பிரதமர் சாடியுள்ளார்.
தெற்கு லெபனானின் அல்-தைரி கிராமத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு வீட்டில் தஞ்சமடைந்திருந்த அமல் கலீல் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சுமார் ஏழு மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்திருந்த அமல் கலீலை மீட்க வந்த செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மீட்புக் குழுவினரை இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தித் தடுத்ததாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெய்ரூட்டில் உள்ள மாவீரர் சதுக்கத்தில் இன்று காலை திரண்ட நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், அமல் கலீலின் உருவப்படத்தை ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் பணியாற்றிய 'அல்-அக்பர்' பத்திரிகை தனது முகப்புப் பக்கத்தில் அவரது புன்னகைத்த முகத்தைப் பகிர்ந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் (CPJ) தகவல்படி, இந்தப் போரில் லெபனானில் மட்டும் இதுவரை குறைந்தது எட்டு ஊடகவியலாளர்கள் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானில் அமுலில் உள்ள 10 நாள் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியிலும் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.