கிண்ணியா நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை!
மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற வாரம், இன்று(15) கிண்ணியா நகர சபையினால் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வாக, கிண்ணியா நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுமக்கள் நடமாடும் சேவை இன்று(15) கிண்ணியா ரஹ்மானியா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய அடையாள அட்டை, அஸ்வெசும நலன்புரி திட்டம், முதியோர் உதவித்தொகை, ஆதன வரி, காணி, கட்டடம், வியாபார உரிமை கட்டணம், சுகாதாரம் மற்றும் பொலிஸ் பதிவுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதோடு, அவைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
நடமாடும் சேவை
மக்களின் பிரச்சினைகளுக்கு இங்கு இங்கு உடனுக்குடன் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதால், சேவை பெறவந்த மக்கள், இந்த நடமாடும் சேவை குறித்து, தங்களது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயல்படுத்த முடிவு செய்துள்ளதால், செவ்வாய்க்கிழமை(16) சுற்றாடல் மற்றும் மரம் நடுகை தினமாகவும், புதன்கிழமை (17) சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தினமாகவும், வியாழக்கிழமை(18) வருமானம் மேம்பாட்டு தினமாகவும், வெள்ளிக்கிழமை (19) இலக்கியம் கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினமாகவும், சனிக்கிழமை (20) பொதுமக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு தினமாகவும், ஞாயிற்றுக்கிழமை(21) சான்றிதழ் வழங்கி, உள்ளூராட்சி வாரத்தை நிறைவுபடுத்துகின்ற தினமாகவும் அனுஷ்டிப்பதற்கு, நகர சபை நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக, தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



