விசா முறையில் முறைகேடு: உயர்நீதிமன்றம் சென்ற ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா
தனியார் நிறுவனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிகாரிகளால் நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான பயண அங்கீகார முறை, சுற்றுலாத் துறை, தேசியப் பொருளாதாரம், தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் முடிவெடுத்தல், கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொது நலனுக்காக இந்த மனுவை, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, தாக்கல் செய்துள்ளது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகள்
அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவை பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் செயலற்ற தன்மையால், மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினர், GBS Technology Services & IVS Global-FZCO, VFS VF Worldwide Holdings ltd தரப்பினர், இலங்கை அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விசா வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாக தனியார் நிறுவனங்களை, முறையற்ற முறையில் தேர்வு செய்வதை மனுதாரர் தரப்பு சவால் செய்துள்ளது.
சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு
இவ்வாறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதால் கடும் நிதி இழப்பும், சுற்றுலாத் துறைக்கு பாதிப்பும் ஏற்படும் என மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் Mobitel (Pvt) Limited உடனான தற்போதைய கூட்டாண்மை, முறைப்பாடுகள் எதுவுமின்றி சீராக இயங்கியதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது
எனினும், பிரதிவாதிகள், அவர்களின் சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற செயல்கள் அல்லது கொள்முதல் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |