சுற்றுலா பயணிகளினால் வீசா நிறுவனத்திற்கு கிடைக்கவுள்ள பல கோடி ரூபா : ஹக்கீம் தெரிவிப்பு
வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வீசா வழங்கும் குறித்த தனியார் வெளிநாட்டு நிறுவனத்திற்கு மாத்திரம் 6 கோடி 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெறும் ஊழல் மாேசடிகள்
"நாட்டில் ஊழல் மாேசடிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்குப் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்று வருவது தொடர்பில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.
மத்திய வங்கி மோசடி
இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு வீசா வழங்கும் குறித்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 6 கோடி 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறுகின்றது. அதாவது இலங்கை ரூபாவில் 1875 கோடி ஆகும்.
தற்போது இடம்பெற்று வரும் மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு வீசா மோசடி அதிகம்.
அத்துடன் இந்த வீசா சேவையை எஸ்.எல்.டி. மொபிடல் நிறுவனம் குறித்த நிதியில் நூற்றுக்கு நான்கு வீதத்தைப் பெற்றுக்கொண்டு வழங்குவதற்கு தயாராகவிருந்தது.
இந்நிலையில், வேறு வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இவ்வாறான பாரிய நிதியைச் செலுத்துவதால் இந்த பணம் யாருடைய பைகளுக்கு செல்கின்றது." என்றும் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |