அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேற்றம்! சஜித் கவலை
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
விமான சேவைகள் நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வாழும் உரிமையை இழந்த இலங்கை மக்கள்
இன்று மக்கள் வாழ்வதற்கான உரிமையைக்கூட மக்கள் இழந்துள்ளனர். பெருமளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நமது நாட்டின் அறிவார்ந்த இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது அதன் காரணமாக புத்திசாலிகள் குறைந்த சமூகமொன்று விரைவில் உருவாகும் சாத்தியம் உள்ளது.
தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் அது சார்ந்த செயல்பாட்டு வரைபடம் உரிய கால எல்லையுடன் நடைமுறைப்படுத்தப்படும் வரை எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
அதற்கு புதிய மக்கள் ஆணையுடன் நிலையான அரசாங்கமொன்று தேவை. அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றிய வண்ணம் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.