பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும்: சிவில் சமூக வலையமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்து (Video)
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் பிரதிநிதிகள் முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
இந்த ஊடக சந்திப்பில் பெண்கள் சிவில் சமூகவலையமைப்பின் ஆலோசகர் ஜென்சிலா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விஜயந்தி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் சிவில் வலையமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது பெண்கள் சிவில் சமூகவலையமைப்பின் ஆலோசகர் ஜென்சிலா, கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான புள்ளிவிபரம் பொலிஸ் நிலையங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான புள்ளிவிபரத்தினை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு ஊடகங்கள் பயன்படுத்தி செய்தி அறிக்கையிடவேண்டும் என்பதை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விஜயந்தி கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 500ற்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன.
2022ஆம் ஆண்டு மட்டும் பிரதேச செயலகங்களில் இவை பதிவாகியுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் 160 ற்கு மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன.
முறைப்பாடுகள்
இது பாரிய சவாலாக இருக்கின்றது எத்தனையோ சம்பவங்கள் வெளியில் வராமல் இருக்கின்றன பொலிஸ் நிலையங்களுக்கு செல்வதை விட பிரதேச செயலகங்களுக்கு வரும் முறைப்பாடு அதிகமாக இருக்கின்றது.
இளவயது திருமணம் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 20 வரையான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இது அதிகரித்துக்கொண்டு செல்கின்றது இது கோவிட் தாக்கத்தில் வந்திருக்கலாம் அத்துடன் இளவயது கர்ப்பபம், கருக்கலைப்பு என்பன அதிகரித்து வருகின்றது.
இதனை குறைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு கொண்டு இருக்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் சிவில் வலையயமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில்,
போதைவஸ்து காரணமாக பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாக இருக்கின்றது.
இந்த போதைவஸ்து பாவனை பாடசாலை மாணவர்களுக்கிடையிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உள்ள வறிய குடும்பங்களையும் பின்தங்கிய கிராமங்களையும் இலக்கு வைத்து வியாபார நோக்கத்தினை அதிகரிப்பதால் குடும்ப வன்முறை பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றது.
போதைப்பொருள் பாவனை
கரையோர பகுதிகளில் இருக்கின்ற பாதுகாப்பு படையினர் துறைசார்ந்த அதிகாரிகள் சரியான கட்டமைப்பினையும் கட்டுப்பாட்டினையும் விதிக்கவேண்டும் கரையோரப்பகுதிகள் ஊடாகத்தான் போதைப்பொருள் வருகின்றது.
தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக போதைப்பொருளினை வியாபாரமாக கொண்டு வீடுகளில் விற்பனை செய்து வருகின்றார்கள்.
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எதிர்காலத்தில் சரியான சட்டத்தில் மாற்றத்தினை கொண்டுவரவேண்டும் தற்போது ஜஸ் என்ற போதைப்பொருள் பேசுபொருளாக காணப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்த சரியான கட்டமைப்பினை இணைத்துக்கொண்டு செயற்படவேண்டும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறையினை குறைப்பதற்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
