இளைஞர்களை சமூகப்பிறழ்வான செயற்பாடுகளில் இருந்து மீட்க வேண்டும்: வடக்கு ஆளுநர்
இளைஞர்களை சமூகப் பிறழ்வான செயல்களில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் மீட்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், இளையோரை சமூகப்பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்த வேண்டும்.
கிராம மட்ட மக்கள் அமைப்புக்கள்
சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராம மட்ட மக்கள் அமைப்புக்கள் தான் முன்னெடுக்க முடியும்.
அத்தோடு, தற்போதைய அரசாங்கம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கின்றது. அதற்கு அமைவாக இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருகின்றது.
இந்த ஆண்டு சிலவற்றை புனரமைப்பதுடன் எஞ்சியவற்றை அடுத்த ஆண்டுகளில் புனரமைக்க எதிர்பார்க்கப்படுகின்றது. மக்களின் ஆர்வமும், பங்களிப்பும் இருந்தால்தான் அபிவிருத்திகளை விரைவில் நிறைவேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

