பற்றைக்காடாக காட்சியளிக்கும் விளாவெளி இந்து மயானம் : விடுக்கப்பட்ட கோரிக்கை
வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார்.
விளாவெளி இந்து மயான உரிமை தொடர்பில் வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைகளுக்கிடையே நீண்ட இழுபறி இருந்த நிலையில் 2018 காலப்பகுதியில் இம்மயானத்தை மானிப்பாய் பிரதேச சபை பொறுப்பேற்க வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்து முதற்கட்டமாக மயானம் துப்பரவு செய்யப்பட்டது.
பொதுமக்களின் நன்மை கருதி
அதன் எரிகொட்டகை, இளைப்பாறு மண்டப புனரமைப்பு, மயான எல்லைப்படுத்தல் போன்ற அபிவிருத்தி பணிகள் செயல்படுத்தப்பட்டது.
விளாவெளி மயானத்தை மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குள் எடுப்பதற்கும் அபிவிருத்தி பணிகள் நடப்பதற்கு காரணமாக இருந்தவன் என்கிற அடிப்படையில் தற்போது மயானம் உரிய பராமரிப்புகள் இன்றி பற்றைக்காடாக மாறியிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையடைகிறேன்.
தற்போதைய பண்டத்தரிப்பு வட்டார உறுப்பினரோ, மானிப்பாய் பிரதேசசபை தவிசாளரோ இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது வேதனையானது.
தற்போது பிரதேச சபைக்கு சொந்தமாக Jcb ரக கனரக இயந்திரம், சாரதி ,மயான அபிவிருத்திக்களை கண்காணிக்கவென பிரதேச சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தனிக்குழு இருந்தும் இம்மயானம் பற்றைக்காடாக காட்சியளிப்பது பிரதேச சபை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையாகவே இதை கருத வேண்டும்.
ஆகவே பொதுமக்களின் நன்மை கருதி விளாவெளி இந்து மயானத்தை முழுமையாக துப்பரவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







