பாதிப்பை ஏற்படுத்தும் ரணிலின் செயற்பாடு! அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் விஜயதாச
புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரையோ அல்லது பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரையோ விரைவாக நியமிப்பது ஜனாதிபதியின் கடமை. அதனை அவர் செய்யாமல் இருப்பது பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனநாயகத்திற்கு பொருத்தமற்ற செயற்பாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரும் பிரதம நீதி அரசரும் கலந்துரையாடி தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து ஜனநாயக முறைமைக்கு பொருத்தம் இல்லை.
அவ்வாறு செயற்படுவது ஜனநாயக முறைமைக்கு முரணானதாகும். என்றாலும் இந்த பிரச்சினையை சபாநாயகருக்கும் பிரதம நீதியரசருக்கு தீர்க்க முடியுமான பிரச்சினையாக இருக்கும் என நான் நம்பவில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமாகும். நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது தொடர்பில் எமக்கு தெரிவிக்க முடியாது. ஏனெனில் நாட்டுக்குள் சர்வதேசத்துடன் தொடர்புடைய சிக்கல்கள் இருக்கின்றன.
அதேபோன்று பாெலிஸாருக்கும் இராணுவத்துக்கும் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால் தேசிய பாதுகாப்பை சாதாரணமாக கருதி செயற்பட அரசாங்கத்துக்கோ நாட்டு தலைவருக்கும் உரிமை இல்லை.
பொலிஸ் மா அதிபர் விவகாரம்
அதனால் பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன்.
அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர், முற்படைகளின் தலைவர் மற்றும் நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் அரசியலமைப்பின் மூலம் அவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் அவர் உடனடியாக பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமித்திருக்க வேண்டும்.
அவ்வாறு நியமிக்காமல் இருப்பது, அவர் அரசியலமைப்பை மீறுவதாகும். ஏனெனில் அவர் ஜனாதிபதியாக சத்தியப்பிரமானம் செய்யும்போது, அரசியலமைப்பை பாதுகாத்து பின்பற்றுவதென்ற சத்தியப்பிரமாணத்தை மீறும் செயலாகும்.
அத்துடன் ஜனாதிபதி, ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டாலும் அவருக்கு ஜனாதிபதியின் கடமைகளை, புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படும்வரை முன்னெடுக்க முடியும். பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பும் ஜனாதிபதிக்கு தனது அதிகாரத்துக்கு அமைய செயற்பட முடியும் என்றவகையிலேயே வழங்கி இருக்கிறது.
அதனால் புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரையோ அல்லது பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரையோ விரைவாக நியமிப்பது ஜனாதிபதியின் கடமை. அதனை அவர் செய்யாமல் இருப்பது பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |