ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார்.. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் - சுப்பிரமணியம் தெரிவிப்பு
இந்திய - இலங்கை, இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைத்து தமிழக முதலமைச்சர் ஒரு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என அகில இலங்கை கடற்றொழில் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பின் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (13) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் நடைபெற்ற திராவிட ஆட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சி.ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆட்சி பீடம் ஏறியுள்ளார். அவருக்கு எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
டெல்லிக்கு கடிதம்..
இலங்கையில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற போரினால் அழிக்கப்பட்டு, பல பிரச்சினைகள் மத்தியில் சவால்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் எமக்கான வாழ்வாதாரமாக இருப்பது பாக்கு விரிகுடா - வளைகுடா இடையேயான கடற்பரப்பே காணப்படுகிறது. இது இவ்வாறு இருக்கையில் அந்த கடற்பரப்பில் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழில்களில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

அந்த சட்டவிரோத தொழிலை தடுப்பதற்காக நான்கு தடவை இந்திய கடற்றொழிலாளர்களுடன் பேசியிருக்கின்றோம். நான்கு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும் அந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இந்த பிரச்சினை குறித்து கடந்த காலத்தில் தமிழக அரசிடம் முறையிட்டபோது அதற்கு முன்னைநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுக்கும் ஆயுதம் பேனா.
பேனாவை எடுத்து உடனடியாக வெளிவிவகார அமைச்சருக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடிதம் எழுதுவார். இதனை நம்பி தமிழக கடற்றொழிலாளர்களும் ஏமாற்றுவார்கள். அதேபோல் இன்று வந்துள்ள முதலமைச்சர் சி.ஜோசப் விஜயும் அதேபோலவே கையில் பேனாவை எடுத்து கடிதத்தை எழுதி ஆரம்பித்துள்ளார்.
அந்தவகையில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களது படகுகளை மீட்குமாறும் கடிதம் எழுதியுள்ளார். இந்த விடயமானது எமக்கு வேதனையை தருகிறது. தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுக்கு நாங்கள் காரணமில்லை.
2016ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தொடக்கம் 8 மாதங்கள் காத்திருந்தோம். அதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் ஒன்பதாவது மாதம் வழக்கு தாக்கல் செய்தோம். அதாவது வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குப்பிரமாணம் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம்.
பேச்சுவார்த்தைக்கு தயார்..
தமிழக கடற்றொழிலாளர்களின் அசமந்தப் போக்கும், எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்ததுவுமே வழக்கு தாக்கல் செய்தமைக்கான காரணமாக அமைந்தது. அந்தவகையில் நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த கட்டளையின்படி எல்லைதாண்டி வரும் படகுகளுடன் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

பழைய அரசுகளின் விடயங்களை எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு இப்போது வந்திருக்கின்ற தமிழக முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சினை குறித்து அலசி ஆராய்ந்து, சாதகமான பாதகமான விடயங்களை அறிந்து இதற்கு நல்லதொரு தீர்வினை வழங்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவரிடம் அன்பாக கேட்க எமக்கு உரிமை இருக்கிறது.
அவர் இந்தியாவில் பிறந்தாலும் அவரது புகுந்த வீடு இலங்கை - யாழ்ப்பாணமே. அந்தவகையில் அவர் புகுந்த வீட்டுக்கும் பெருமையை தேடித் தர வேண்டும். அவர் நல்லதொரு தீர்வினை தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழக கடற்றொழில் பிரதிநிதியான யேசுராசா ஒரு விடயத்தை கடந்சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
அதாவது, கடந்த காலத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் முழுமையாக கையொப்பம் இடவில்லை என்று கூறினார். சரி அது ஒரு காரணமாக இருக்குமாக இருந்தால் மீண்டும் நாங்கள் ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருக்கிறோம்.
இந்த புதிய தமிழக அரசானது இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களையும் வெகு விரைவில் அழைத்து ஒரு புதிய பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த பேச்சுவார்த்தை மூலம் இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் பரஸ்பர உறவோடு வாழமுடியும் என்றார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam