வாகீசன் இராசையாவுக்கு 'வேல்' வழங்கிப் பாராட்டிய கனேடிய அமைச்சர்! கனடாவில் பதிவான வரலாற்று நிகழ்வு
கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), ஜனவரி 24ஆம் திகதி சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.
உலகத்தமிழர்கள்
இந்த இசைச் சங்கமமானது, உலகத்தமிழர்களை இசையாலும் உணர்வாலும் ஒன்றிணைக்கும் ஒரு வரலாற்றுப் பாலமாக அமைந்திருந்தது.

இந்த கலைவிழாவில், 'சிலோன் ராப்' (Ceylon Rap) சொல்லிசைக் கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒன்ராறியோ மாநில சுகாதார இணை அமைச்சரும், ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் சொல்லிசைக் கலைஞர்களை நேரில் பாராட்டி கௌரவித்துள்ளார்.
"ஈழ மண்ணிலிருந்து வந்த இந்த இளம் கலைஞர்கள், சொல்லிசை எனும் நவீன கலை வடிவத்தினூடாக எமது செந்தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றனர்.
விஜய் தணிகாசலம்
எமது வரலாற்றையும் அடையாளத்தையும் உலகுக்கு உரக்கச் சொல்லி, உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குரலாக இவர்கள் ஒலிக்கின்றனர். சமூக மாற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் கலை ஒரு வலிமையான ஆயுதம் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சர் விஜய் தணிகாசலம் ஒவ்வொரு கலைஞரின் தனித்துவத்திற்கும் ஏற்ப பெறுமதிமிக்க நூல்களைத் தனது கைப்படப் பரிசாக வழங்கினார்.

தமிழர்களின் வீரம், கொடை மற்றும் கல்வி நெறிகளைப் பறைசாற்றும் 'புறநானூறு' நூலை அத்விக் உதயகுமாருக்கும், அறம் போதிக்கும் உலகப் பொதுமறையாம் 'திருக்குறள்' நூலை திஷோன் விஜயமோகனுக்கும் அவர் வழங்கினார்.
வாகீசன் இராசையாவுக்கு, முப்பாட்டன் முருகனின் பெருமைகளைச் சந்த ஓசையுடன் பாடும் 'திருப்புகழ்' நூல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் மிக முக்கிய சிறப்பம்சமாக, பாடகர் வாகீசனுக்கு ஒரு 'வேல்' பரிசாக வழங்கப்பட்டது.
பரிசாக வேல்
'வண்ண மயில் ஏறும்...' பாடலின் மூலம் உலகளாவிய புகழ்பெற்ற வாகீசன், தனது சொல்லிசைப் பாடல்களில் 'பார்வதி மகன்' என்றும், எம் இனத்தலைவன் என்றும், போற்றப்படும் முப்பாட்டன் முருகனைத் தொடர்ந்து முன்னிறுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வாகீசனை எதிர்காலத்தின் ஒரு சிறந்த தலைமையாகக் கருதுவதாகவும், அதன் அடையாளமாகவே இந்த வேலை அவருக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கலை விழாவிற்கு அப்பால், அன்றைய நிகழ்வு சமூக முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ரொறன்ரோவில் அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்திற்காக ஒரே இரவில் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது.
கனடிய மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநகராட்சி ஆகிய மூன்று நிலை அரசாங்கங்களின் நிதியுதவியையும் ஆதரவையும் இந்த மையம் ஏற்கனவே பெற்றுள்ளது.
வரலாற்று நிகழ்வு
உலகளாவிய தமிழ்ச் சூழலில், புலம்பெயர் தமிழ் மக்களால் கட்டப்படும் முதலாவது தமிழ் சமூக மையம் இது என்பதால், எமது எதிர்கால சந்ததியினருக்காக ஒரு நிரந்தரமான இடத்தை உருவாக்கித் தரும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்று தமிழ்ச் சமூகம் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.

அரசாங்கங்கள் தமது பங்கைச் செய்துள்ள நிலையில், இந்த மையத்தை முழுமைப்படுத்துவது சமூகத்தின் கடமை என்பதும் இவ்விழாவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விழா ரொறன்ரோ வாழ் தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியையும், இளம் சொல்லிசை கலைஞர்களுக்கான கௌரவத்தையும் ஒருசேர வழங்கிய ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.




