வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம்
வவுனியா, சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு, அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது.
பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகள் இடைநிறுத்தம்
மேலும், அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு, எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளவிடாது தடை விதித்திருந்தது.

எனினும் ஊர் மக்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சின் அனுமதியை பெற்று பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தினை தாம் புனரமைத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதனை அறிந்து எண்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு, எல்லப்பமருதன்குளம் குளக்கட்டு பகுதியில் அது கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
விகாரை அமைக்கும் பணி
குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம் கிளிநொச்சி, குருந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் ஆய்வுகளின் போது காணப்பட்டதாக தொல்பொருளாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை ஒத்த சிவலிங்கமே சமணங்குளம் பகுதியில் காணப்பட்டதாகவும், அந்த எண்கோண வடிவிலான சிவலிங்கமே குறித்த எண் கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கின்ற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த பகுதியில் முழுமையாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

