திருக்கேதீச்சரத்தில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க முயற்சி
திருக்கேதீச்சரத்திலும் எதிர்காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் எவரும் இல்லாத நேரத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த அபிவிருத்தியும் செய்ய முடியாது என பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியுள்ளனர்.
ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அரச திணைக்களம் திருட்டுத்தனமாக ஏன் பெயர்ப்பலகை இட வேண்டும் என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சட்டவிரோத செயற்பாடு
கடந்த ஆண்டுகளில் இதே போன்ற செயற்பாட்டின் மூலமே முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியாய் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் அதன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டனர்.

திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என கூறும் ஐனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவின் பதில் என்ன, இரவோடு இரவாக பெயர்பலகை நாட்டியது சட்டவிரோதம் இல்லையா, குருந்தூரில் இந்துமாத தொல்லியல் சின்னங்கள் அகற்றப்பட்டு சிங்கள பௌத்த சின்னங்கள் இருப்பதாக கட்டுகதை ஒன்றை உருவாக்கி விகாரை அமைத்தது போன்ற செயற்பாடுகள் எதிர் காலத்தில் திருக்கேதீச்சரத்திலும் இடம்பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.