தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்கள் பாடசாலை தொடங்கப்பட்டதன் 27 ஆவது ஆண்டு பாடசாலை தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பானது நேற்று (25.03.2024) மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் இளம் சமூகத்தினர் குறிப்பாக கல்வி கற்கும் மாணவர்கள் போதையாலும் சமூக சீர்கேடுகளாலும் அழிந்து கொண்டு செல்கின்றார்கள்.
போதையிலிருந்து மீளல்
இவற்றில் இருந்து மாணவர்களை மீட்டு கல்வியினை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளனர்.
போதை எமக்கு வேண்டாம் போதையில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கோசங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி - சண்முகம் தவசீலன்