முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல இனப்படுகொலையின் சாட்சியாக செம்மணி மனித புதைகுழியும்!
இலங்கைத் தீவில் இடம்பெற்ற முப்பது வருட யுத்தம் காரணமாக முழு நாடும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சொத்தழிவுகள், உயிரிழப்புக்கள், காணாமல் போதல்கள் என்பன இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இனங்களுக்கு இடையில் ஒருவர் தோளில் ஒருவர் கைகோர்த்து சமத்துவமாக வாழும் நிலையை உருவாக்க முடியாது உள்ளது.
யுத்தம் மெளனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்தும் நாட்டில் உண்மையான இன நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியாமல் உள்ளது. அதற்கு தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
காணி அபகரிப்பு
தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கன நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை என குறைந்த பட்ச செயற்பாடுகளை கூட ஆட்சியாளர்கள் முழு மனதுடன் செய்யவில்லை. இதன் காரணமாக போரின் வடுக்களுடன் நீதிக்காக ஏங்கும் ஒரு தேசிய இனமாக தமிழர் தேசம் மாறியிருக்கின்றது.
இந்த நிலையில் யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிசார் மற்றும் புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரிலும், சுற்றி வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கு அமைய பலர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டோருக்கும் என்ன நடந்தது என நீதி கோரி மக்கள் 3000 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புதிதாக வெளிவரும் மனித எச்சங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யுத்தம் முடிந்த பின்பு மன்னார் சதோச, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய், செம்மணி சித்துபாத்தி, சம்பூர் என பல இடங்களில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. அதில் தமிழ் இனத்தின் மீது திட்டமிட்டு படுகொலை புரிந்தமைக்கான சான்றாக செம்மணி சித்துபாத்தி புதைகுழி மாறியிருக்கின்றது. அதற்கு காரணம் அங்கு ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான தடயங்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையே. அப்பட்டமான போர் விதி மீறலை முள்ளிவாய்கால் மண் மட்டுமன்றி செம்மணி புதைகுழியும் வெளிப்படுத்தியுள்ளது.
செம்மணி மனித புதைகுழி
செம்மணி என்பது எவராலும் மறந்து விட முடியாத ஒரு இடம், ஒரு கறை படிந்த இடம், 1998 ஆம் ஆண்டில், செம்மணியில் மனிதப்புதைகுழி இருப்பதாக படுகொலைகளுக்காக விசாரணையில் இருந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 1995, 1996 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அரச படையினரால் மீட்கப்பட்ட யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் உள்ள புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
அங்கு சுமார் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1998 யூலை இல் இலங்கை இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச மாணவி கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்திரை கற்பழித்து படுகொலை செய்ததற்காக மரண தண்டனையை எதிர்கொண்டார். குடாநாட்டில் இருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் அடங்கிய புதைகுழிகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராஜபக்சவும் அவரது இணைப் பிரதிவாதிகளும் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானதாகக் கூறப்படும் 20 பாதுகாப்புப் படை வீரர்களின் பெயர்களைக் கொடுத்தனர்.
ஆனால் முறையான ஆய்வுகளோ பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகளோ இடம் பெறவில்லை. இதனையே செம்மணி சித்துபாத்தி புதிய புதைகுழி வெளிப்படுத்தி நிற்கின்றது. செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் கடந்த வியாழக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 88 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவ் என்புத் தொகுதிகளுடன் யுனிசெப் நிறுவனத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான புத்தகப் பை, இரும்புகள் என நம்பப்படும் ஒரு தொகுதி கட்டிகள், பொம்மைகள், சிறுபேத்தல், காப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.
உண்மையான நீதி
மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் சிறு குழந்தைகளினதும் அடக்குகின்றன. ஆக, செம்மணி சித்துபாத்தி பகுதியில் சிறுவர், முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு நீதியான விசாரணை இடம்பெற வேண்டும். இச் சம்பவம் இடம்பெற்ற போது யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த படை தளபதிகள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் போன்று செம்மணி சிததுபாத்தி விசாரணையும் கிடப்பில் போடப்படாது. அது சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக விசாரணை செய்யப்பட வேண்டும்.
அதற்கு பொறுப்பானவர்கள், துணை போனவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பரிகார நீதியை பெற்றுக் கொடுக்க முடியும். கடந்த கால அரசாங்கங்களைப் போல் இல்லாது அநுர அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி, நீதியை நிலைநாட்டுவதன் மூலமே தமிழ் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள வடுக்களை நீக்க முடியும்.
இனப்படுகொலையின் சாட்சியாக இருக்கும் செம்மணி சித்துபாத்தி மனிதபுதை குழி தொடர்பில் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் இராஜ தந்திர வட்டாரங்கள் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் அந்த இடத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி சென்றிருந்தார்.
அவர் அங்கு அணையா விளக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மனங்களில் காணப்பட்ட வலிகளையும், நீதிக்கான ஏக்கத்தையும் புரிந்து கொண்டவராகவே சென்றார். ஆக, சித்துபாத்தி மனித புதைகுழி சர்வதேசத்தினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும் இதற்கு உண்மையான நீதி கிடைக்குமா என்பதே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள ஏக்கமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 31 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



