பதுளை வைத்தியசாலையில் நாய் கடியால் சிகிச்சைப் பெற்றவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள வியப்பு தகவல்
பதுளை போதனா மருத்துவமனையில் பூனை மற்றும் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சைகள் அதிகரித்து வருவது குறித்து விலங்கு தொகை முகாமைத்துவத்துக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சம்பவங்களில், 95வீதமானவை, தெரு விலங்குகளால் நிகழ்ந்தவை அல்ல. மாறாக, வளர்ப்பு செல்லப்பிராணிகளால் நேர்ந்தவை என்று சங்கம் கண்டறிந்துள்ளது.
கடந்த ஆண்டு மாத்திரம் 6,700 நோயாளிகள் பூனை மற்றும் நாய் கடிக்கு அவசர சிகிச்சை பெற்றதாக பதுளை போதனா மருத்துவமனையின் பதிவுகள் காட்டுவதாக வெளியான தகவலை அடுத்தே இந்த கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவறான எண்ணம்
முன்னதாக, தெரு நாய் எண்ணிக்கை அதிகரிப்பதே, இந்த சம்பவங்களுக்கான காரணம் என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்ததாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் மொத்த நாய் எண்ணிக்கையில் தெரு நாய்கள் 3வீதம் மாத்திரமே என்றும் விலங்கு தொகை முகாமைத்துவத்துக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிலும் 2 வீதமானவை, காடுகளில் வேட்டையாடுவதன் மூலம் உயிர்வாழ்கின்றன, மீதமுள்ளவை கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்கின்றன.
இதன்படி உண்மையிலேயே உரிமையாளர் இல்லாத நாய்களின் எண்ணிக்கை வெறும் ஒரு வீதம் மட்டுமே என்றும் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களிடம் உள்ள நாய்களில் 10 வீதம் மட்டுமே கூண்டுகள், கயிறுகள் அல்லது மூடப்பட்ட இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன
ஏனைய 79 வீதமானவை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன, பெரும்பாலும் சாப்பிடவும் உறங்கவும் மட்டுமே வீடு திரும்புகின்றன.
8 வீத நாய்கள் கோயில்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், இராணுவ முகாம்கள், கடைகள் மற்றும் விவசாயப் பகுதிகள் போன்ற பொது இடங்களில் வாழ்கின்றன.
தடுப்பூசிகள்
அத்துடன், இந்த சமூக நாய்களில் 60 வீதமானவைக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன, 80 வீதமானவைக்கு விசர்கடிநாய் எதிர்ப்பு உட்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் விலங்கு தொகை முகாமைத்துவத்துக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 300,000 நாய் கடி சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாக பொது சுகாதார கால்நடை சேவை தெரிவித்துள்ளது,
கடந்த ஆண்டில் மாத்திரம் விசர் நாய் கடி காரணமாக 20 பேர் பலியாகினர்
இதனையடுத்து கடந்த ஆண்டு சுமார் 200,000 மனிதர்களுக்கு விசர்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.