நாடளாவிய ரீதியில் இடம்பெறும் வெசாக் தின கொண்டாட்டங்கள்(Photos)
நாடளாவிய ரீதியில் வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்றையதினம் (05.05.2023) சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தினகொண்டாட்டங்கள் வெகு விமர்சையாகவும் இடம்பெற்று வருகின்றன.
குறித்த நிகழ்வினையொட்டி பிரதேசம் முழுவதும் வெளிச்சக்கூடுகளினாலும், கொடியலங்காரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தமை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி
தமிழ்-சிங்கள உறவை வலுப்படுத்தும் வகையில் கிளிநொச்சியில் வெசாக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு இன்று (05.05.2023) பகல் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள், வர்த்தகர்கள், வாகன உரிமையாளர்கள் என பலரும் இணைந்து கொண்டாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வீதியால் பயணித்த தமிழ் சிங்கள மக்கள் அவற்றை பெற்று நல்லிணக்கத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினர், பொலிஸார் அன்னதான நிகழ்வுகளை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
செய்தி-எரிமலை
யாழ்ப்பாணம்
யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ ராஜமகா விகாரையில் வெசாக்தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் கூடுகள் கட்டப்பட்டு, பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு, பெளத்த பாடல்கள் போடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
செய்தி-தீபன்
வவுனியா
வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் 1000 பேருக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தால் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமுதாய பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலர், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், காத்தார் சின்னக்குளம் சமுதாய பொலிஸ் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி:திலீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று வெசாக் வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்களராமய விகாராதிபதி மற்றும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.