வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி! (Video)
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வேலன் சுவாமி முற்ப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
வேலன் சுவாமியின் சட்டவிரோதமான கைதுக்கு எதிராக வேலன் சுவாமி சார்பில் இந்து அமைப்புக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எ.சுமந்திரன் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரியக்கத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமி சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் மாலை அவரது இருப்பிடத்துக்கு சென்ற பொலிஸார் அவரை விசாரணைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர் .
தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பிலான விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பலர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட போதிலும் அவர்கள் விசாரணைக்காக சென்றிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை வேலன் சுவாமி தரப்பினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 8.30 மணிக்கு நீதவான் முன்னிலையில் வேலன் சுவாமி முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி குருபரன் தற்போது பொலிஸ் நிலையம் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்தி: தீபன்