வவுனியாவில் பெட்ரோலுக்காக 7 கிலோ மீற்றர் தூரத்திற்கு வரிசையில் நிற்கும் வாகனங்கள் (Photos)
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெட்ரோலை பெற்றுக்கொள்ள 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
வவுனியா - இறம்பைக்குளம் எரிபொருள் நிலையத்திற்கு இன்று அதிகாலை 6600 லீற்றர் பெட்ரோல் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்குக் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே 7 கிலோமீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
பெட்ரோலுக்கு வரிசையில் நிக்கும் வாகனங்கள்
மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபாயும், முச்சக்கரவண்டிக்கு 3000 ரூபாய்க்கும், கார் மற்றும் வான் வாகனங்களுக்கு 8000 ரூபாய்க்கும் என்ற அடிப்படையிலேயே பெட்ரோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், கொள்கலன்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை.
இறம்பைக்குளம் எரிபொருள் நிலையத்திலிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நகர் வரை 2 கிலோமீற்றர் தூரத்திற்கும் குறித்த எரிபொருள் நிலையத்திலிருந்து வெளிக்குளம் பொது மயானம் வரையான வீதியில் 3 கிலோமீற்றர் தூரத்திற்கும், எரிபொருள் நிலையத்திலிருந்து கோவிற்குளம் சிவன் கோவில் வரையான வீதியில் 2 கிலோமீற்றர் தூரத்திற்கும், 7 கிலோமீற்றர் தூரத்திற்கு வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
குறித்த எரிபொருள் நிலையத்தில் மக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டமையுடன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து வரிசைகளைக் கட்டுப்படுத்தியதுடன், வரிசைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்தலும் வழங்கியிருந்தார்.