யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் சிக்கிய சுகாதார அமைச்சு ஊழியர்கள்! தலை தெறித்தோடிய வாகனம்
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றின் சாரதி மதுபானம் அருந்திக்கொண்டு வாகனம் செலுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த குறித்த வாகனத்தின் சாரதியே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான, அவசர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குறித்த வாகனத்தில் வைத்து, வாகனத்தின் சாரதி மற்றும் மேலுமொருவர் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.
இதனை அவதானித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணொளி பதிவு செய்துள்ளதுடன், இதுதொடர்பில் குறித்த வாகன சாரதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட காணொளி..
எனினும், இது நோயாளர் காவு வண்டி அல்ல என்றும், இதனை நீங்கள் ஏன் கேட்கின்றீர்கள் என்றும் காணொளி பதிவு செய்தவரிடம் கடுமையாக கூறிவிட்டு வாகனத்தை எடுத்து பின்னால் செலுத்திச் சென்றுள்ளார்.
குறித்த வாகனத்திற்குள் மதுபான போத்தல்கள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபானம் அருந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சின் முத்திரையுடன், அவசர சுகாதார சேவைகளுக்காக செயற்படும் இதுபோன்ற வாகனங்களின் சாரதிகள் இவ்வாறு போதையில் வாகனம் செலுத்துவது, பணி நேரத்தில் மது அருந்துவது உள்ளிட்டவை பொதுமக்களிடத்தில் அச்சத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.
மேலும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து உரிய தரப்பினர், சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



