வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களின் இறக்குமதிக்கான வரி
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாகன வகைகளின் இறக்குமதிக்கான தீர்வை வரிகளை மூன்று மாத காலத்திற்கு அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த நடவடிக்கையின் பலனாக, இந்த ஜூலை மாதத்தில் வாகன இறக்குமதி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதத்தின் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் முறையே 1.81 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 1.19 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்களே வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில், வாகன இறக்குமதிக்காக நாளொன்றுக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் சராசரிப் பெறுமதி 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
நிலவும் சூழலில் 7 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.