இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு முன்மொழியப்பட்ட பின் வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்கள் பெரும் கட்டுப்பாடுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
புதிய வாகனங்களை இறக்குமதி செய்ததன் பின்னர் வாகனங்களின் தற்போதைய உள்ளூர் சந்தை விலைகள் அதிகரிக்கும் என சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் அறிவிப்பு
இதேவேளை ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி கூறுகையில், வாகனங்களின் இறக்குமதியை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
வாகன சந்தையில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் கையிருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை.
இந்த நிலைமையில், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டாலும், வாகன இறக்குமதியில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இருப்பினும், அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளோம்.
இந்த இலக்கை நோக்கிய ஒரு படியாக இந்த ஆண்டு, சுற்றுலாப் போக்குவரத்துக்கான பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய கொள்கையுடன் வாகன இறக்குமதி
இதேவேளை புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன் பெர்னாண்டோ முன்னதாக அறிவித்திருந்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உபகுழு கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த உப குழுவில் வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை முன்னெடுப்போம். கடந்த 15 – 20 வருடங்களாக எந்த கொள்கையும் இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்து வருகிறோம்.
அத்துடன் வாகனங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. எனவே, புதிய கொள்கையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவோம் என நம்புகிறோம் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |