மரக்கறி விலைகள் தொடர்பில் வெளியான தகவல்
டீசல் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் படிப்படியாக உயர்ந்து வருவதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் சிறு வியாபாரிகளின் வருகை பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் தகவல்களின்படி, மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 500 ரூபாவுக்கும், தக்காளி 400 ரூபாவுக்கும், பாகற்காய் 420 ரூபாவுக்கும், கத்தரிக்காய் 370 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 420 ரூபா, சிறகவரை 360 ரூபா, வெள்ளரிக்காய் 160 ரூபா என்ற விலைகளில் காணப்படுவதுடன், வெண்டைக்காய் மற்றும் புடலங்காய் ஆகியவற்றின் விலை 200 முதல் 280 ரூபா வரையான விலைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் சில்லறை விலைகள் மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஒரு கிலோ போஞ்சி 600 – 650 ரூபா வரையிலும், ஒரு கிலோ கறிமிளகாய் 450 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மலையகப் பகுதிகளில் மரக்கறிச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அறுவடை குறைவடைந்துள்ளதால், வரும் நாட்களில் மரக்கறி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார மத்திய நிலையங்களின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.