வவுனியாவில் முன்னாள் போராளி பிணையில் விடுதலை: தொடரும் பொலிஸாரின் அராஜகம் (Photos)
வவுனியாவில், கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளை அகற்ற முற்பட்டார் என்று தெரிவித்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்றையதினம்(28) அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை அவரை பிணையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவளை, குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் மீதும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் போராளி
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகள் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளி ஒருவர் மேலும் இருவருடன் சேர்ந்து அந்த பதாகைகளை அகற்ற முற்பட்டுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார் குறித்த முன்னாள் போராளியை கைது செய்துள்ளனர்.
அத்துடன், முன்னாள் போராளிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்துள்ளனர்.
பிணை வழங்கிய நீதிமன்றம்
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி இன்றையதினம் (28.11.2023) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் விடுவித்ததுள்ளது.
இது தொடர்பான அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ஆம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீதும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், அவரை கைது செய்யுமாறு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்திடம் கோரிக்கையும் முன்வைத்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



