சுதந்திரக்கட்சியின் ஊடக சந்திப்பை புறக்கணித்த வவுனியா வடக்கு தவிசாளர்
இலங்கை சுதந்திரக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பை வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் புறக்கணித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு பிரதேச சபையை இலங்கை சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிக் கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில்,அதன் தவிசாளராக இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்த த.பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அவரது முதலாவது பாதீடும் கடந்த திங்கள் கிழமை சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், வவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் வாசலவின் அலுவலகத்தில் இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளரின் ஊடக சந்திப்பு இருப்பதாக ஊடகவியலாளர்களுக்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளரால் கடந்த திங்கள் கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த ஊடக சந்திப்பு இன்று (29) மீளவும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் சமூகளித்து இருந்த நிலையில் பிரதேச சபை தவிசாளர் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதனையடுத்து மாவட்ட அமைப்பாளர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் வருவதாக கூறினார். அவருக்காக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஊடகவியலாளர்கள் காத்திருந்தனர். இருப்பினும் அவர் அங்கு சமூகமளிக்கவில்லை. மீண்டும் மாவட்ட அமைப்பாளர் பல தடவை அவரை தொடர்பு கொண்ட போதும் அவர் அவரது அழைப்புக்களுக்கு பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், ஊடகவியலாளர் சிலர் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளரை தொடர்பு கொண்ட போது தான் குறித்த ஊடக சந்திப்பிற்கு வரமாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார்.
வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் வருகை தராமை தொடர்பில் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மாவட்ட அமைப்பாளர் ஊடகவியலாளருக்கு இதன்போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வவுனியா மாவட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிலர் அப்போதைய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் தேர்தலில் களமிறக்கப்பட்டிருந்தனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கே.கே.மஸ்தான் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரால் நியமிக்கப்பட்டு சுந்திரக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் தற்போது பொதுஜன பெரமுன சார்பாக செயற்படுகின்றனர்.
இந்த விவகாரம் காரணமாகவே வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளரும் சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து உள்ளதாக கட்சி வட்டாரத்தில் இருந்து தெரியவருகின்றது.



