வவுனியா இரட்டை கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விசாரிக்க சிஐடிக்கு உத்தரவு
புதிய இணைப்பு
வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய சிஐடிக்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழு வீட்டு உரிமையாளர் மீது வாளால் வெட்டிவிட்டு வீட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்திருந்தனர்.
குறித்த சம்பவத்தில் இளம் குடும்ப பெண் மூச்சு திணறல் காரணமாகவும் அவரது கணவன் தீயில் எரிந்தமை காரணமாகவும் மரணமடைந்திருந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்திருந்தனர்.
ஐவர் கைது
குறித்த சம்பவத்துடன் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிஐடி விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற
உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தே நபராக கருத்தப்படும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02.08.2023) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (03.08.2023) குறித்த நபரை வவுனியா
நீதிமன்றில் முற்படுத்திய சிஐடியினர் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய
அனுமதி கோரியநிலையில், சந்தேகநபரை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை இன்று (03.08.2023) குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினர் நீதவான் முன்னிலையில் மன்றுக்கு முன்னிலைப்படுத்தி பொலிஸ் விசாரணைக்குட்டபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிபதி உத்தரவு
குறித்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(02.03.2023) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.
இதன்போது, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்ட போது நீதிபதி 02.08.2023 உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |